திராவிடர் மன்றம்

அஞ்சாமை திராவிடர் உடமையடா!

வணக்கம்.

முத்தமிழ் அறிஞர் டாக்டர். கலைஞர் பிறந்த நன்னாளாம் June 03, 2020 அன்று,

திராவிடர் மன்றம்” என்னும் முன்னெடுப்பைத் தொடங்கினோம்.

இது திராவிட ஆய்வுக்குழு நண்பர்களின் மற்றுமொரு புதிய முயற்சியாகவும் அவர்களது அனைத்து முயற்சிகளையும் அடையாளப்படுத்துகிற பெயராகவும் திகழும்.

கல்லூரிகளில் தமிழ் மன்றங்கள் செயற்படுவதைப் பார்த்திருப்பீர்கள். பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பட்டி மன்றம் என்று ஏதாவது சில நிகழ்வுகளை நடத்திய வண்ணம் இருப்பார்கள். இதன் மூலம் மாணவர்களின் தமிழ் அறிவும் ஆளுமையும் கூர் தீட்டப்படும்.

அதைப் போன்ற முயற்சியே திராவிடர் மன்றமும்.

ஆட்சியில் இருக்கிறார்களோ இல்லையோ, வாக்கரசியலில் இருந்தார்களோ இல்லையோ, பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் தங்கள் வாழ்நாளின் ஒவ்வொரு நாளும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள். படித்தார்கள். எழுதிக் குவித்தார்கள். பேசினார்கள். போராடிக் கொண்டே இருந்தார்கள்!

நமக்குக் கிடைத்த தலைவர்கள் காணக் கிடைக்காதவர்கள், நாம் அவர்கள் வழியில் அரசியல் பேசி தலைமைப் பண்பை வளர்த்துக்கொள்வது எப்போது?

அரசியலில் ஏற்றம் காண விழையும் நாம் சும்மா இருந்தால் மாற்று அரசியல் என்ற பெயரில் நமக்கு எதிரான அரசியல் வரும்.

எல்லோரும் பல்வேறு முழு நேர வேலைகளில் இருக்கிறோம். யாரும் இங்கு 100% பெரியார், அண்ணா, கலைஞர் போல் ஆக முடியாது. ஆனால், அவர்கள் உழைப்பில் 1% கொடுக்கக் கூடிய 100 பேர் சேர்ந்தால், கூட்டுச் சக்தியாக இணைந்தால் நிச்சயம் ஒரு சிறு மாற்றத்தையாவது நிகழ்த்த முடியும்.

இத்தனை நாள் அரசியல் பேசிக் கொண்டிருந்தோம். இனி அரசியல் செய்ய வேண்டும்.

இது வழக்கமாக அரசியலில் இயங்குகிற ஒரு கட்சியோ (வாக்கு அரசியல்) கழகமோ (இயக்க அரசியல்) அன்று. இது அந்த இரு வகை அரசியல் களங்களுக்கும் படையணிகளை அனுப்புகிற பாசறையாகத் திகழ வேண்டும் என்று விரும்புகிறோம்.

இதற்கு நமக்கு நாமே உருவாக்கிக் கொள்கிற அரசியல் பயிற்சிக் கூடம் (Political gym) என்று திராவிடர் மன்றத்தை நோக்கலாம். நிறைய பேர் கூட்டு உழைப்பைச் செலுத்துகிற போது இது ஒரு சிந்தனைக் குழாமாகவும் (think tank) பரிணமிக்க முடியும்.

ஆகவே, நீங்கள் எந்தக் கட்சி, அமைப்பில் இருந்தாலும் இதில் இணையலாம். ஆனால், பின்வருபவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

* திராவிடம் எங்கள் அரசியல் கொள்கை

* பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரை எங்கள் முப்பெருந்தலைவர்களாக ஏற்றுக் கொள்கிறோம்.

* வாக்கு அரசியலில் திமுகவை என்றும் நிபந்தனையின்றி ஆதரிப்போம்.

இந்த முன்னெடுப்பில் இணைவதற்கான எதிர்பார்ப்புகள்:

* உங்களுக்குத் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கான விருப்பம் இருக்க வேண்டும். தீவிர அரசியல் என்பது குடும்பம், தொழில், வேலையை விட்டு விட்டு முழு நேரம் அரசியலுக்கு வருவது அன்று. பகுதி நேரமாவது, ஒரு நாளில் 30 நிமிடங்களாவது செயலாற்றும் நோக்கிலான அரசியல். செயல் செயல் செயல். அது ஒன்றே தாரக மந்திரம்.

* இது செயலாற்றும் குழு. ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற ஒரு சிறு செயலை பொறுப்பெடுத்துக் கொண்டு செயற்பட வேண்டும். எடுத்துக்காட்டுக்கு,

* இந்த வாரம் நான் அண்ணா/பெரியார் எழுதிய ஒரு சிறு நாலை வாசிப்பேன். வாரம் குறைந்தது 50 பக்கங்களாவது வாசிப்பேன். வாசித்ததைப் பற்றி எழுதுவேன். அல்லது, வீடியோவில் பேசுவேன். நண்பர்களுக்கு எடுத்துரைப்பேன். இது மிகவும் அடிப்படையாக செய்யக்கூடிய ஓர் அரசியற் செயற்பாடு. இதைச் செய்ய முடியுமானால் நீங்கள் இந்த முயற்சியில் இணையலாம்.

* இன்ற வாரம் என் கல்லூரி, பள்ளி, அலுவலக நண்பர்களைச் சந்தித்து திராவிடம் குறித்து உரையாடுவேன். அந்தக் கூட்டத்திற்கு ஒரே ஒரு ஆள் தான் வருகிறார் என்றாலும் சரி. நான் செயலாற்றுவேன்.

* இந்த மாதம் நான் நீட் / கல்விக் கொள்கை / பொருளாதாரக் கொள்கை போல் ஏதேனும் ஒரு அரசியல் நிலைப்பாடு பற்றி முழுமையான பார்வைகளைப் பதிந்து தொகுத்து ஒரு நூலாக வெளியிடுவேன்.

* திராவிடத்தின் பார்வையில் கல்வி, சுற்றுச் சூழல், மொழி, இட ஒதுக்கீடு, பொருளாதாரம் தொடர்பான கொள்கைகள் போன்றவை எப்படி அமைய வேண்டும்? இவற்றைக் குறித்து நம் தலைவர்கள் பார்வை என்ன? இதில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டு Working group, Task force அமைத்து ஆண்டு முழுதும் அதற்காக உழைப்பேன். நண்பர்களை இணைப்பேன். முடிவெடுக்கக் கூடிய கட்சிகளைச் சந்தித்து கருத்துருவாக்கத்தில் ஈடுபடுவேன்.

* தற்போது நாட்டில் நடக்கும் முக்கியப் பிரச்சினை என்ன? அதைக் குறித்து திராவிடத்தின் கருத்து எத்தகையதாக இருக்க வேண்டும்? எடுத்துக்காட்டுக்கு, CAA. அதைப் பற்றி திராவிடப் பார்வையில் திராவிட மன்றம் சார்பாக அறிக்கை வெளியிடுவேன். அல்லது, ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்வேன்.

உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறோம். உங்கள் செயல் சிறிதாகவோ பெரிதாகவோ இருக்கலாம். கூட்டாகவோ தனியாகவோ இருக்கலாம். அந்த முயற்சி வெற்றியாகவோ தோல்வியாகவோ முடியலாம்.

ஆனால், நாம் செயல் ஆற்றுவோம்.

வேறு எதுவுமே நடக்காவிட்டாலும், குறைந்தபட்சம் நம் அளவில் இன்னும் பொறுப்புடன் அரசியல் நடவடிக்கைளில் ஈடுபட்டிருப்போம் என்ற நிறைவு ஏற்படும்.

தற்போது, இந்த முயற்சியில் தலைவர், செயலாளர், பொருளாளர், பொறுப்பாளர் என்றெல்லாம் யாரும் கிடையாது. என்னால் முடிந்ததை நான் செய்கிறேன். உங்களால் முடிந்ததை நீங்கள் செய்யுங்கள். ஒருவருக்கு ஒருவர் இணையாகவும் துணையாகவும் இருப்போம். இது ஒருவருக்கு உதவிக் கொள்ளும், நெறிப்படுத்தும் இணைச் செயற்பாடாக (peer-driven), பல்வேறு நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்கள் என்று பரந்துபட்டதாகவும் உள்ள ஒரு முயற்சியாக அமையும். இது இணையத்தில் ஒருங்கிணைக்கப்படும் ஆனால் செயல் களத்தில் இருக்கும்.

நீங்கள் எந்த மொழி, இனம், மதம், சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இணையலாம். குறிப்பாக, பெண்கள், இளைஞர்கள், மாணவர்களை ஈர்க்கும் வகையில் நாம் செயற்பட வேண்டும். இதே முன்னெடுப்பில் பங்காற்றிக் கொண்டே நீங்கள் வேறு எந்தக் கட்சி அல்லது அமைப்புகளிலும் இருக்கலாம்.

உங்கள் கடவுள் நம்பிக்கை உங்கள் தனிப்பட்ட முடிவாக அமையும். சமூக, அரசியல் மாற்றம் தான் நம் இலக்கே தவிர தனிமனித மாற்றம் நம்முடைய இலக்கு அன்று.

மன்றத்தில் இணைய விரும்பும் போது,

ஏன் திராவிடர் மன்றத்தில் இணைய விரும்புகிறீர்கள் என்றும் உங்களின் இந்த வாரம் / மாதம் / ஆண்டுக்கான அரசியற் செயற்பாட்டு இலக்கு என்ன என்றும் கேள்வி இருக்கும்.

அதற்கு நீங்கள் அளிக்கும் விடையைப் பொருத்து குழுவில் சேர்க்கை அனுமதி கிடைக்கும்.

கவனிக்கவும் : நீங்கள் ஒவ்வொரு நாளும் நேரம் ஒதுக்கி என்ன செயலாற்றப் போகிறீர்கள் என்று பதில் தரவும். பொதுவாக, மோடி ஒழிய வேண்டும், நமது ஆட்சி வர வேண்டும் போன்ற பதல்கள் நல்ல நோக்கமாக இருக்கலாம். ஆனால், அதற்கு உங்கள் செயற்பாடு என்னவாக இருக்கும் என்பதே கேள்வி.

இது ஒரு அரசியல் Gym என்றால், Gymக்கு வந்து நீங்கள் என்ன செய்வீர்கள் என்பது தான் கேள்வி. பொதுவாக, உடல் நலம் பற்றி அறிய, வேடிக்கை பார்க்க யாரும் Gymக்குப் போவது இல்லை.

உங்களுக்கு நம் நோக்கம் புரிய வேண்டும் என்பதற்காக இந்த Gym எடுத்துக்காட்டு.

சும்மா இருக்கிற 1000 பேரை விட செயலாற்றுகிற 10 பேர் இந்த முயற்சியில் இணைந்தாலும் போதும். ஏதேனும் ஐயம், கேள்விகள் இருந்தால் கேளுங்கள்.

வாருங்கள். திராவிட அரசியல் பழகுவோம்.

செயலாற்றுவோம்.

இங்கே அழுத்தி மன்றத்தில் இணையலாம்.

திட்டங்கள், பிற விவரங்களுக்கு 6vds4o14q at mozmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். நன்றி.