திராவிடர் மன்றம்
அஞ்சாமை திராவிடர் உடமையடா!
திராவிட இயக்க வினாடி வினா
பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே திராவிட இயக்க வரலாறு குறித்த விழிப்புணர்வைப் பரப்பும் வகையில் திராவிடர் மன்றம் வினாடி வினா போட்டி நடத்துகிறது.
- ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கும்
- இளங்கலை கல்லூரி மாணவர்களுக்கும்
என போட்டி இரு பிரிவுகளாக நடத்தப்படும்.
போட்டி தொடக்க நாள்: சூன் 17, 2020, புதன்கிழமை.
போட்டியில் பங்கேற்க விரும்புவோர் தன்னுடன் இணைந்து பங்கேற்க இன்னொரு நண்பரைக் கூட்டுச் சேர்த்துக் கொள்ள வேண்டும். 2 பேர் கொண்ட அணிகளாகத் தான் போட்டியில் பங்கேற்க முடியும்.
போட்டியாளர்கள் தங்கள் விவரங்களை இணைத்துள்ள கூகுள் படிவத்தில் நிரப்ப வேண்டுகிறோம்.
உங்கள் பெயர் விவரம் தந்த பிறகு அடுத்த பகுதியில் கேள்விகள் வரும். அவற்றை நிரப்பி ஆகஸ்டு 31க்கு முன்பு சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த முதல் சுற்றுக் கேள்விகளுக்கான பதில்களை நீங்கள் இணையத்திலேயே தேடிக் கண்டெடுக்க முடியும்.
ஆகஸ்டு 31 வரையான காலக்கட்டத்தில் திராவிடம் தொடர்பான நூல்கள், வரலாற்றுச் செய்திகளைத் தேடிப் படித்து உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளலாம்.
இது அடுத்த சுற்றில் நீங்கள் வெற்றி பெற உதவும்.
ஆகஸ்ட் 31க்குப் பிறகு, இரண்டாம் சுற்று மற்றும் அதற்கு அடுத்த கட்ட சுற்றுகள் யாவும் நேரலையில் YouTube, Twitter, Facebook தளங்களில் ஒளிபரப்பப்படும்.
படிக்கப் பரிந்துரைக்கும் நூல்கள்:
- பெரியார் 1000 வினா விடை – திராவிடர் கழகம் வெளியீடு
- திராவிட இயக்கப் பெருமக்கள் – பேரறிஞர் அண்ணா
- திராவிட இயக்க வரலாறு – திரு. முரசொலி மாறன்
- திராவிட இயக்க வரலாறு – ( பகுதி 1, பகுதி 2) – திரு. ஆர்.முத்துக்குமார்
இந்நூல் பட்டியல் தொடர்ந்து விரிவுபடுத்தப்படலாம். பெரும்பாலான கேள்விகள் இந்த நூல்களில் இருந்து அமையலாம்.
போட்டி ஒருங்கிணைப்பாளர்: கோபிநாத் ராமசாமி. ஐயங்கள், கேள்விகள் இருப்பின் திராவிடர் மன்றம் முகநூல் பக்கத்தின் Inboxல் கேட்கலாம்.
பரிசுகள்:
பள்ளி, கல்லூரி இரு பிரிவுகளுக்கும் சேர்த்து மொத்தப் பரிசு 36,000 INR. பரிசு இந்திய ரூபாயில் இந்தியாவுக்குள் மட்டுமே அனுப்பி வைக்கப்படும்.
பள்ளி/கல்லூரி இரு பிரிவுகளிலும் தலா,
- முதற் பரிசு 10,000 INR
- இரண்டாம் பரிசு –5,000 INR
- மூன்றாம் பரிசு – 3,000 INR
இறுதிச் சுற்றுக்கு வரும் அனைவருக்கும் PeriyarBooks.in வழங்கும் 500 INR மதிப்பு மிக்க கூப்பன்கள் வழங்கப்படும்.
போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் மின்-சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இறுதிச்சுற்றுக்கு வருவோரில் குறைந்தது ஒரு அணி பெண்கள் அணியாக இடம்பெறுமாறு பார்த்துக் கொள்வோம். அது போல், மூன்று பரிசுகளில் ஒரு பரிசும் பெண்கள் பங்கேற்கும் அணிக்கு வழங்கப்படும். ஆண், பெண் இருவரும் கலந்தும் ஒரு அணியாகப் பங்கேற்கலாம்.
நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
பரிசு வெல்வோர் பரிசுகளைப் பெற்றுக் கொள்ளும் முன் பள்ளி/கல்லூரி அடையாளச் சான்றுகளைக் காட்ட வேண்டும். உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் கலந்து கொள்ளலாம். கேள்விகள் தமிழில் அமையும்.
முதல் முறை நடைபெறும் இப்போட்டியின் வெற்றியின் அடிப்படையில் தொடர்ந்து இது போன்ற போட்டிகள் நடத்தப்படும்.
பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
திராவிடம் கற்போம்! திராவிடம் போற்றுவோம்!
திட்டங்கள், பிற விவரங்களுக்கு 6vds4o14q at mozmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். நன்றி.